நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம், கனடாவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா ஆல்பெர்டாவில் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. மேலும், இப்படத்தில் நடித்த சிறுவன் சாய் பிருத்விராஜும் சிறந்த நடிகருக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளார். விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இக்கூட்டணியின் முந்தைய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால், இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். சிறுவன் சாய் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனம், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18’ மற்றும் ‘சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. ரவுடியாக வாழும் கதாநாயகன் எதிர்பாராத பிரச்சினையில் சிக்குவதும், அந்தச் சிக்கலுக்குப் பின்னால் இருப்பவர் யார் என்பதைக் கண்டறிந்து அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவான இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், ரூ.35 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமாகவும் அமைந்தது. தொடர்ந்து, கடந்த அக்டோபர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது. குறிப்பாக, இப்படத்தில் நடித்த சிறுவன் சாய் பிருத்விராஜின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா ஆல்பெர்டாவில் ‘பத்தா’ திரைப்படம் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற சிறுவன் சாய் பிருத்விராஜ் சிறந்த நடிகருக்கான ‘ஸ்பெஷல் மென்ஷன்’ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சிறுவன் சாய் பிருத்விராஜுக்கு தமிழ் திரையுலக ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.