செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஆனால், கொடியேற்றத்தின்போது கொடி திடீரென அறுந்து விழுந்ததால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. திருப்போரூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான விழா நேற்று காலை பக்தர்களின் அரோகரா முழக்கங்களுக்கு மத்தியில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ஆறு நாட்கள் நடைபெறும் இவ்விழாவின்போது, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் முருகப்பெருமான் பல்லக்கு, ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருவார். மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் என கோலாகலமாக நடைபெறும் இந்த ஊர்வலத்தில் அசுரர்களின் உருவ பொம்மைகளும் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆறாம் நாள் மாலை நடைபெறுகிறது. அப்போது முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட உள்ளது. இதைக் காண உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மறுநாள் திங்கட்கிழமை மாலை தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் அதிகளவிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா நாட்களில் தினமும் லட்சார்ச்சனை நடைபெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். கொடி அறுந்ததால் பரபரப்பு இந்நிலையில், நேற்று காலை சுமார் 5.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றபோது, கொடிமரத்தில் ஏற்றப்பட்டிருந்த கொடி திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதனால் அங்கிருந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கோவில் பணியாளர்கள் ஏணியின் உதவியுடன் கொடிமரத்தில் மீண்டும் கொடிக்கயிற்றைக் கட்டினர். தொடர்ந்து பரிகாரங்களும் செய்யப்பட்டன. இதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் கொடியேற்றம் நடைபெற்றது. கொடிக்கயிற்றின் தரம் குறைவாக இருந்ததே அது அறுந்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.