திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில், ஆயுத பூஜையை முன்னிட்டு கட்டாயமாகப் பணம் வசூலிக்க முயன்றதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி அப்பகுதிக்கு வந்த சில திருநங்கைகள், ஆயுத பூஜை பண்டிகைக்காகப் பணம் தர வேண்டும் எனக் கூறி தொழிற்சாலை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து, ஆத்திரமடைந்த அவர்கள் தொழிற்சாலையின் பிரதான நுழைவாயில் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றுள்ளனர். இதைக் கண்ட பாதுகாப்புப் பணியாளர்களும் ஊழியர்களும் உடனடியாக நுழைவாயிலை மூடி, அவர்களைத் தொழிற்சாலைக்குள் நுழையவிடாமல் தடுத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பண்டிகைக் காலங்களில் ஒவ்வொரு தொழிலாளரும் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என வற்புறுத்தி, மிரட்டிப் பணம் வசூலிக்க முயற்சிப்பதாகத் தொழிற்சாலை நிர்வாகங்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிப்காட் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அனுமதியின்றித் தொழிற்சாலைகளுக்குள் நுழைய முயற்சிப்போர் மற்றும் மிரட்டி பணம் வசூலிப்போர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.