கடலூர் அருகே சுங்கச்சாவடியைக் கடந்து நடந்து சென்ற நபரின் தலையில், தானியங்கி தடுப்புக் கம்பி திடீரென விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. கடலூர் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கொத்தட்டை சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை, அந்தச் சுங்கச்சாவடியை ஒருவர் நடந்து கடக்க முயன்றுள்ளார். அப்போது வாகனங்கள் செல்வதற்காகச் செயல்படும் தானியங்கி தடுப்புக் கம்பி எதிர்பாராதவிதமாக அவரது தலையில் வேகமாக விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவர், நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதைப் பார்த்த சுங்கச்சாவடி ஊழியர்களும் அங்கிருந்த பொதுமக்களும் உடனடியாக அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்தச் சம்பவத்துக்குச் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனக் கூறி பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.