கடலில் சீறிப்பாய்ந்த பாய்மர படகுகள்... தொண்டி அருகே விறுவிறுப்பான போட்டி!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கடலில் சீறிப்பாய்ந்த பாய்மர படகுகள்... தொண்டி அருகே விறுவிறுப்பான போட்டி!

கடலில் சீறிப்பாய்ந்த பாய்மர படகுகள்... தொண்டி அருகே விறுவிறுப்பான போட்டி!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தில் பாய்மர படகு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. முள்ளிமுனை கிராமத்தில் உள்ள பட பத்திரகாளி, முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று பாய்மர படகு போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் தொண்டி, புதுக்குடி, நம்புதாளை, தேவிபட்டினம், கிருஷ்ணாஜிபட்டினம், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இருந்து மொத்தம் 26 பாய்மர படகுகள் பங்கேற்றன. கடலில் 6 மைல் தூரம் சென்று மீண்டும் திரும்பும் வகையில் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு படகிலும் தலா 7 பேர் என மொத்தம் 182 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடலில் பாய்மர படகுகள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றதால் போட்டி பரபரப்பாக அமைந்தது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிராமத் தலைவர் மாயவன் தலைமை வகித்தார். கிராம நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். போட்டியை ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் திரண்டு ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். தொண்டி கடற்கரை போலீசாரும், தொண்டி போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.