கடன் விவகாரம்: காவல் நிலையத்தில் புகார் அளித்த வாலிபர் வெட்டிக்கொலை - 4 பேர் கைது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

10 Sep 2026 www.thinathulir.com

கடன் விவகாரம்: காவல் நிலையத்தில் புகார் அளித்த வாலிபர் வெட்டிக்கொலை - 4 பேர் கைது

கடன் விவகாரம்: காவல் நிலையத்தில் புகார் அளித்த வாலிபர் வெட்டிக்கொலை - 4 பேர் கைது

சென்னை திருவொற்றியூரில் ரூ.18 லட்சம் கடன் தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த 28 வயது இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த பிரதீப், தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகே நின்றிருந்த அவரை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பிரதீப்பின் தலையில் அவர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் வருவதை கவனித்த அந்த நபர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், பிரதீப்பின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு தெரிந்த ஒருவருக்காக மற்றொருவரிடம் கடன் வாங்கி பணம் கொடுத்தது தெரியவந்தது. அந்தக் கடனுக்காக இதுவரை ரூ.18 லட்சம் வரை செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மீதமுள்ள கடனை திருப்பிச் செலுத்துமாறு கடன் கொடுத்தவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக பிரதீப் ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தார். தன்னை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அவர் காவல் நிலையம் முன்பு தெரிவித்திருந்ததாக போலீசார் கூறுகின்றனர். இந்த சூழலில் பிரதீப் விரட்டிச் சென்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு கடன் தொடர்பான கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமா? அல்லது அதே பகுதியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக மாதவரம் பகுதியில் பதுங்கியிருந்த நாராயணன், ஹரிகிருஷ்ணன், ஜபார் மற்றும் லோகேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.