கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, கடன் கொடுத்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு வரவழைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மங்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், பர்கூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் அந்தத் தொகையை அவர் திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து சுமார் 4 மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷை தனது வீட்டுக்கு வரவழைத்த அந்தப் பெண், கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக பத்திரத்தில் எழுதி வாங்கியுள்ளார். அதன்படி, மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வட்டியாக வழங்க வேண்டும் என்றும், ஒரு ஆண்டுக்குள் ரூ.5 லட்சம் கடன் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வட்டிப் பணத்தைப் பெறுவதற்காக அந்தப் பெண் வெங்கடேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அவரை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு வருமாறு வெங்கடேஷ் அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு சென்ற பெண்ணுக்கு, வெங்கடேஷ் மற்றும் அவரது உறவினரான இளங்கோ ஆகியோர் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட இருவரும் முயன்றதாக தெரிகிறது. ஆனால், மயக்கம் ஏற்படுவதற்கு முன்பே நிலைமையை உணர்ந்த அந்தப் பெண், தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தான் இருக்கும் இடத்தை பெற்றோர் கண்டறியும் வகையில் வாட்ஸ்அப் மூலம் லொகேஷனையும் அனுப்பியுள்ளார். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அங்கு சென்று, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக அந்தப் பெண்ணை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் பர்கூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேஷ் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பர்கூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.