கடன் சுமையால் விபரீத முடிவு: 3 வயது மகனை சாலையில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்த தம்பதி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

29 Aug 2026 www.thinathulir.com

கடன் சுமையால் விபரீத முடிவு: 3 வயது மகனை சாலையில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்த தம்பதி

Thinathulir Reporter
கடன் சுமையால் விபரீத முடிவு: 3 வயது மகனை சாலையில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்த தம்பதி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கடன் பிரச்சினை காரணமாக 3 வயது மகனை தனியாக விட்டுவிட்டு, தம்பதி கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய். இவரது மனைவி சிரீஷா. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று இரவு, இருவரும் தங்களது குழந்தையை ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளனர்.நள்ளிரவில் கோதாவரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது, பாலத்தின் நடுப்பகுதியில் சாய் வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் தம்பதி இருவரும் குழந்தையை ஸ்கூட்டரிலேயே அமர வைத்துவிட்டு, கைகோர்த்தபடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளனர்.பெற்றோர் ஆற்றில் குதித்தது தெரியாமல் இருந்த சிறுவன், இரவு நேரத்தில் தனியாக அழுதுகொண்டிருந்தான். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் குழந்தை மட்டும் தனியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து அங்கு வந்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த ஸ்கூட்டரையும் போலீசார் கைப்பற்றினர்.முதற்கட்ட விசாரணையில், சாய்-சிரீஷா தம்பதிக்கு அதிகளவில் கடன் இருந்ததும், இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அவர்கள் மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி காரணமாக தம்பதி இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே, கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் ஆற்றில் குதித்த தம்பதியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.3 வயது குழந்தையை தனியாக தவிக்கவிட்டு தம்பதி எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.