கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பெல்ராம்பட்டியைச் சேர்ந்த சாரதிகுமார் (25), பஞ்சப்பள்ளி தின்னூரைச் சேர்ந்த அக்மல் பாபுபாய் (28), அனுமந்தபுரம் அருகே உள்ள ஜம்பூத் பகுதியைச் சேர்ந்த காவேரி (32) ஆகியோர் இந்தத் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று மாலை மூன்று தொழிலாளர்களும் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மயக்கமடைந்த அவர்கள் தொட்டிக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சக தொழிலாளர்கள் மூவரையும் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விஷவாயு தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் விபத்து குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா, தேன்கனிக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், காவல் ஆய்வாளர் ரஜினி உள்ளிட்டோரும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மூன்று தொழிலாளர்களும் விஷவாயு தாக்கியதால் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வெளியேறுவதைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள் விஷவாயுவாக மாறியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அமைச்சர் உத்தரவு இந்தத் துயரச் சம்பவம் குறித்து அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வரத் தேவையான மனவலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகத்தினருடன் தொலைபேசியில் பேசியதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாகத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் பாதுகாப்பும் கண்ணியமும் எப்போதும் முதன்மையானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருக்க, தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது என்பதே அனைவரின் முதன்மையான பொறுப்பு என்றும் அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.