வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி அதிரடியாக சதம் விளாசினார். 88 பந்துகளை எதிர்கொண்ட அவர், 10 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களுடன் 139 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரது சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் மூலம் விராட் கோலி பல்வேறு முக்கிய சாதனைகளையும் தன்வசப்படுத்தியுள்ளார். அவை: * சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்கள்: 61 ரன்களை கடந்தபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை எட்டினார் விராட் கோலி. இந்த மைல்கல்லை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். * சர்வதேச கிரிக்கெட்டில் 86-வது சதம்: ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து சர்வதேச போட்டிகளையும் சேர்த்து கோலியின் சதங்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் 100 சதங்களுடன் சச்சின் தெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். * இந்திய மண்ணில் அதிக ஒருநாள் ரன்கள்: ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு நாட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை இதுவரை சச்சின் தெண்டுல்கர் வசம் இருந்தது. இந்தியாவில் 6,976 ரன்கள் எடுத்திருந்த சச்சினின் சாதனையை, நேற்று 7,006 ரன்களுடன் விராட் கோலி முறியடித்தார். * ஒரே அணிக்கு எதிராக 10 சதங்கள்: ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக 10 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக அவர் தலா 10 சதங்கள் விளாசியுள்ளார். * ஒருநாள் போட்டியில் அதிகபட்ச சிக்சர்கள்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கோலி 9 சிக்சர்களை அடித்தார். ஒருநாள் போட்டியின் ஒரு இன்னிங்சில் அவர் பதிவு செய்த அதிகபட்ச சிக்சர்கள் இதுவாகும்.