ஒருகாலத்தில் தவறுகளை தட்டிக்கேட்ட ஐபிஎஸ் அதிகாரி... இன்று மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியையாக சீமா அகர்வால்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

22 Jul 2026 www.thinathulir.com

ஒருகாலத்தில் தவறுகளை தட்டிக்கேட்ட ஐபிஎஸ் அதிகாரி... இன்று மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியையாக சீமா அகர்வால்

ஒருகாலத்தில் தவறுகளை தட்டிக்கேட்ட ஐபிஎஸ் அதிகாரி... இன்று மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியையாக சீமா அகர்வால்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றிய சீமா அகர்வால், கடந்த ஜூன் மாதத்தில் ஓய்வு பெற்றார். 1990-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான அவர், தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து சிறப்பாக பணியாற்றியவர். காவல் பணியுடன் சமூக சேவையிலும் தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருந்தார். பணியில் இருந்த காலத்திலேயே சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களை கற்பித்து வந்தார்.பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தனது சமூகப் பணியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் செயல்படும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை கற்பித்து வருகிறார். இதற்காக அவர் முன்கூட்டியே விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், மாநகராட்சி அனுமதி வழங்கியது. அதன்படி, சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு ஆசிரியர் பணியை தொடங்கிய அவர், தினமும் காலை தலா 40 நிமிடங்கள் கொண்ட இரண்டு பாடவேளைகளை நடத்தி வருகிறார்.இதுகுறித்து சீமா அகர்வால் கூறுகையில், “பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு என்னால் இயன்ற சிறிய சேவையாக இந்தப் பணியை மேற்கொள்கிறேன். ‘கற்றலில் மகிழ்ச்சி’ என்ற அணுகுமுறையில், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களை கற்பிக்கிறேன்.பல மாணவர்களின் பெற்றோரால் வீட்டில் பாடங்களை சொல்லிக் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. அதனால், ஒரு தாயின் அக்கறையுடன் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பணியை தொடர்ந்து செய்து வருகிறேன்” என்றார்.சீமா அகர்வாலின் எளிமையான கற்பித்தல் முறை மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கி அவர்களின் கல்வி ஆர்வத்தை ஊக்குவித்து வருகிறார். உயரிய காவல் பொறுப்பில் இருந்தவர், தற்போது ஆசிரியையாக மாறி மாணவர்களின் கல்விக்காக நேரத்தை ஒதுக்கி சேவையாற்றி வருவது பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.