ஒடிசாவில் தொடர் கனமழை: மாநிலம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஒடிசாவில் தொடர் கனமழை: மாநிலம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’

ஒடிசாவில் தொடர் கனமழை: மாநிலம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’

ஒடிசா மாநிலத்தில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ஒடிசாவில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வானிலை அமைப்பின் தாக்கத்தால் சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை (ஆகஸ்ட் 14) வரை வடக்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசத்தின் கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் போக்ராயில் அதிகபட்சமாக 236 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சியாமகுந்தாவில் 230 மி.மீ., மயூர்பஞ்ச் மாவட்டம் பாரிபாடாவில் 215 மி.மீ. மற்றும் பாலசூர் மாவட்டம் ராஜ்காட்டில் 204 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.பாலசோர் நகரில் இன்று காலை 5.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 137 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் மலைப்பகுதிகளிலும் மிக கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக புதபலங்கா, ஜலாகா உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்துள்ளது.ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர் கனமழை காரணமாக மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து, மாணவர்களின் பெற்றோருக்கு விடுமுறை குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.