கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்தும் குறைந்திருந்தது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,600 கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 8,186 கனஅடியும் என மொத்தம் 9,786 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் வினாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த ஒகேனக்கல் நீர்வரத்து, நேற்று காலை 7,000 கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்ததால் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசாரும் தீயணைப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரியில் வரும் நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், 3 நாட்களுக்கு முன்பு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் வழங்கியிருந்த அனுமதி நேற்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது. அதேவேளை, ஒகேனக்கல் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வந்து அருவி மற்றும் ஆற்றில் குளித்து உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.