எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்: உருவ படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Sep 2026 www.thinathulir.com

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்: உருவ படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்: உருவ படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டி ஹால்டா சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த.சரத்குமார் ஆகியோர் ராமசாமி படையாட்சியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து, அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் அருள்பிரகாசம் (சைதாப்பேட்டை), தியாகராஜன் (செங்கல்பட்டு), சரவணமூர்த்தி (சோழிங்கநல்லூர்), காமாட்சி (பல்லாவரம்), விஜயராஜ் (திருப்போரூர்), ஹரிஷ் (ஆலந்தூர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண்தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆரம்ப கால வாழ்க்கை எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார், தென்னாற்காடு மாவட்டத்தின் கடலூரில் சிவசிதம்பரம் படையாட்சி - ரெத்தினம்மாள் தம்பதியருக்கு 16.9.1918 அன்று பிறந்தார். சிறுவயது முதலே கல்வி மற்றும் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அந்தக் காலத்தில் வழங்கப்பட்ட இன்டர்மீடியட் கல்வி வரை பயின்றார். 1950-ம் ஆண்டின் தொடக்க காலகட்டத்தில் தென்னாற்காடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து செயல்பட்டார். இளம் வயதிலேயே சமூகப் பணியில் ஈடுபாடு கொண்ட அவர், 24-வது வயதில் கடலூர் நகராட்சி உறுப்பினராக தேர்வானார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நகராட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார். கடலூர் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு குடிநீர் திட்டத்தையும் அவர் கொண்டு வந்தார். சுமார் 60 ஆண்டுகள் பொதுவாழ்வில் செயல்பட்ட ராமசாமி படையாட்சியார், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு அமைச்சராகவும் மக்கள் பணியாற்றினார். பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ராமசாமி படையாட்சியாரின் கோரிக்கையைத் தொடர்ந்து, 1970-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு முதலாம் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவை அமைத்தது. A.N.சட்டநாதன் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 1992-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி ராமசாமி படையாட்சியார் மறைந்தார். அவரது நீண்டகால மக்கள் சேவையைப் போற்றும் வகையில், 1993-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தென்னாற்காடு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தது. அதில் ஒரு பகுதிக்கு ராமசாமி படையாட்சியார் மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டது. அவரது நினைவைப் போற்றும் வகையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் முழு உருவ வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ம் தேதி அவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.