தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை, மாலத்தீவு கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருவைகுளத்தைச் சேர்ந்த சூசைபாக்கியம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 8 மீனவர்களும், மைக்கேல் ஜான்சங்கர் என்பவரின் படகில் 8 மீனவர்களும், ரமேஷ்குமார் என்பவரது படகில் 9 மீனவர்களும் என மொத்தம் 25 பேர் கடந்த 1-ஆம் தேதி கடலுக்குச் சென்றனர். செவுள் வலைகளைப் பயன்படுத்தி ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக அவர்கள் மூன்று விசைப்படகுகளில் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை மாலத்தீவில் இருந்து சுமார் 150 கடல் மைல் தொலைவில் மூன்று படகுகளிலும் இருந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மாலத்தீவு கடற்படையினர், அந்தப் படகுகளைச் சுற்றி வளைத்தனர். மாலத்தீவு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, மூன்று விசைப்படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் கடற்படையினர் சிறைபிடித்தனர். தொடர்ந்து, மீனவர்களை மாலத்தீவுக்கு அழைத்துச் சென்றதுடன், அவர்களது மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விரைவாக மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள் 25 பேர் மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.