திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவநிலை, நீர்வரத்து, நீர் இருப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக காய்கறிகள், கீரைகள், தென்னை, வாழை, கரும்பு, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதில் சில பகுதிகளில் எலுமிச்சை சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது. ‘ராஜகனி’எனப்படும் எலுமிச்சை ரகத்தில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அதிக மகசூல் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஒரு ஏக்கரில் சுமார் 160 செடிகள் வரை நடவு செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் பெற முடியும். செடிவகை எலுமிச்சை சமதளப் பகுதிகளிலும், கொடிவகை மலைப்பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. நடவு செய்த மூன்றாவது ஆண்டில் அறுவடைக்கு வரத் தொடங்குகிறது. அன்றாட உணவில் எலுமிச்சைக்கு முக்கிய இடம் இருப்பதால், ஆண்டு முழுவதும் அதற்கான தேவை இருந்து வருகிறது. வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் எலுமிச்சையில் உள்ளன. கோடை காலத்தில் எலுமிச்சைச் சாறுடன் உப்பு மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் பானகம், உடலில் ஏற்படும் நீரிழப்பை குறைக்க உதவுகிறது. இதுபோன்ற காரணங்களால் பல விவசாயிகள் எலுமிச்சை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரும் எலுமிச்சையின் அளவும் குறைந்துள்ளது. வரத்து குறைந்ததன் தாக்கமாக விலையும் வேகமாக உயர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையான எலுமிச்சை, தற்போது கிலோ ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், உடுமலையை விட கிழக்கு மாவட்டங்களில் எலுமிச்சை சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. இதனால் தென்காசி மாவட்டம் புளியங்குடி, திண்டுக்கல் மாவட்டம் திருமலை, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எலுமிச்சையை கொள்முதல் செய்து, மொத்த விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர். தற்போது வரத்து குறைந்துள்ளதால் எலுமிச்சையின் விலை கிலோ ரூ.300 வரை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல், குமரலிங்கம் பகுதியில் எலுமிச்சை கிலோ ரூ.220 வரை விற்பனையாகி வருவதாகவும் அவர்கள் கூறினர்.