‘எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் தயங்குகிறாரா?’ – எடப்பாடி பழனிசாமி கேள்வி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
10 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

‘எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் தயங்குகிறாரா?’ – எடப்பாடி பழனிசாமி கேள்வி

‘எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் தயங்குகிறாரா?’ – எடப்பாடி பழனிசாமி கேள்வி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது அவமானகரமானது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஆட்சியருக்கு, த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மது போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு கொடுத்ததாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மாவட்ட மக்களின் பாதுகாப்பையும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய முக்கியப் பொறுப்பில் இருப்பவர் ஆட்சியர். அத்தகைய அதிகாரிக்கே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வால் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பது வெட்கக்கேடானது. மாவட்ட நிர்வாக நீதிபதியாகவும் செயல்படும் ஆட்சியருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், இதற்கு முதல்வர் விஜய் என்ன பதில் கூறப்போகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உள்ளாடையுடன் நிற்க வைப்பதாக மிரட்டிய அமைச்சர், மனு அளிக்க வந்தவரைத் தாக்கி அவதூறாகப் பேசியதை மறைக்க முயன்ற துணை சபாநாயகர், தற்போது மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் எம்.எல்.ஏ. என த.வெ.க.வினரின் செயல்பாடுகள் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் அவர்களின் நிலையை வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ளார். ஆளுங்கட்சியினர் தவறு செய்யும்போது மௌனம் காக்கும் அரசு, இதே குற்றச்சாட்டுகளில் எதிர்க்கட்சியினர் சிக்கியிருந்தால் செய்தித் தொடர்பாளர்கள் ஊடகங்கள் முன்பு கடுமையாகப் பேசியிருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் அஞ்சுகிறாரா? வாக்களித்த மக்களின் பாதுகாப்பைக் காட்டிலும் முதல்வர் பதவிக்கே அவர் முக்கியத்துவம் அளிக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கெனவே பாலியல் வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட ஸ்ரீவைகுண்டம் த.வெ.க. எம்.எல்.ஏ. விஜய் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்யாமல், சட்டமன்றத்திலேயே அவருக்கு நற்சான்று வழங்கி விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அதே அணுகுமுறை அருள் விக்னேஷ் விவகாரத்திலும் பின்பற்றப்படுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மாவட்ட ஆட்சியருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்தப் பிரச்சினை தொடர்பாக முதல்வர் விஜய் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தனது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசியல் தலையீடு இல்லாத நேர்மையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.