பிரதமர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாகவும், அந்த விவாதத்திற்குப் பிறகு அவர் பிரதமர் பதவியில் தொடர முடியாது என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடி தன்னுடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும், மோடி ஒரு துரோகி என்பதை நிரூபிக்க தனக்கு 5 நிமிடங்கள் மட்டுமே போதும் என்றும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார். இதற்கு பாஜக மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டு, பிரதமருக்கு ராகுல் காந்தி சவால் விடுப்பதாக அவர்கள் விமர்சித்தனர். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், விவாதம் நடத்துவதற்கான இடத்தை பிரதமர் தேர்வு செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கூற வேண்டிய அவசியமில்லை என்றும், நாடாளுமன்றத்திலேயே விவாதம் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து ராகுல் காந்தி செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியுடனான நேரடி விவாதம் தொடர்பாக ராகுல் காந்தி மீண்டும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 'என்னிடம் கேளுங்கள்' என்ற நிகழ்வின் மூலம் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், பிரதமருடன் நேரடி விவாதம் நடத்த விரும்புவதற்கான காரணத்தையும் விளக்கினார். அப்போது ஒருவர், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடியைத் தனியாக நேருக்கு நேர் விவாதிக்க அழைப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, மக்களவையில் தனக்குப் பேசுவதற்கு முறையான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்றும், தனது மைக் அணைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், விவசாய மசோதாக்கள், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு, எஸ்.ஐ.ஆர். பணிகள், சீனாவுடனான விவகாரம், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நரவானேயின் புத்தகம் மற்றும் எப்ஸ்டீன் ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தனக்கு நீண்ட உரைகள் இடம்பெறும் வழக்கமான விவாதம் தேவையில்லை என்றும், இரு தரப்பினரும் நேரடியாகக் கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கும் வகையிலான விவாதமே வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார். இதற்காக ஒரே மேடையில் மேசையின் இருபுறமும் மோடியும் தானும் அமர்ந்து விவாதிக்கலாம் என்றும், ஒருவருக்கொருவர் நேரடியாகக் கேள்விகளை எழுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவாதத்திற்கு அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானியோ அல்லது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தோ நடுவராக இருந்தாலும் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் குறிப்பிட்டார். இறுதியாக, தன்னுடன் பிரதமர் மோடி நேருக்கு நேர் விவாதம் நடத்தினால், அதன் முடிவில் அவர் பிரதமராகத் தொடர முடியாத நிலை ஏற்படும் என ராகுல் காந்தி மீண்டும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.