என் தோட்டத்தில் மின் வயர்கள் திருட்டு - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

03 Sep 2026 www.thinathulir.com

என் தோட்டத்தில் மின் வயர்கள் திருட்டு - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

என் தோட்டத்தில் மின் வயர்கள் திருட்டு - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை முன்வைத்து பேசினார்.காவல்துறை மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் துறை என்று குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி பல உயிர்களை காப்பாற்றியதாக பாராட்டினார். காவலர்கள் ஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போது புதிதாக 29,108 காவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பது போதுமானதாக இல்லை என்றும், 625 பேருக்கு ஒரு காவலர் என்ற விகிதம் போதாது என்றும் அவர் கூறினார்.மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தினால்தான் தமிழ்நாட்டை பாதுகாப்பான மாநிலமாக உருவாக்க முடியும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதுடன், சட்டம்-ஒழுங்கும் சீராக இருந்ததாக கூறிய அவர், அந்த காலகட்டத்தில் சென்னை பாதுகாப்பான நகரமாக விளங்கியதாகவும் குறிப்பிட்டார்.குற்றச்செயல்களை கையாள அதிமுக ஆட்சியில் கணினி வழி புதிய பிரிவு உருவாக்கப்பட்டதாகவும், காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டதாகவும் கூறினார்.காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்ற தவெக அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். ஓய்வு பெற உள்ள காவல் ஆய்வாளர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், பெண் காவலர்களை இரவு நேர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதைப் போல சிறப்பு புத்தாக்கப் பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் தூசி படிந்து, பதிவுகள் முறையாக கிடைக்காத நிலை இருப்பதாக குறிப்பிட்ட அவர், அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றார். அதிகளவில் விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.மக்களிடம் ஆதாரங்கள் இருந்தபோதிலும் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் வசூலிப்பதாக புகார்கள் வருவதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை கருவூலத்தில் செலுத்தாமல் வட்டிக்கு விடுவதாக செய்திகள் வெளியாகி வருவதால், இதனை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.எடப்பாடி தொகுதிக்குட்பட்ட ஜலகண்டபுரத்தில் புறவழிச்சாலை அமைப்பதற்கான 80 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட அந்த புறவழிச்சாலை திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதைப் போல விவசாயிகள் 22 மணி நேரம் மின் மோட்டாரை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பல இடங்களில் பைக் ரேஸ் நடைபெறுவதாக வரும் தகவல்களை அடிப்படையாக கொண்டு, அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இணையவழி குற்றங்களை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், தனியாக வசிக்கும் முதியவர்களை குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.இதனிடையே, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு போர்வெல் இயக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் வயர்கள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார். திருடப்பட்ட மின் வயர்களின் புகைப்படங்களை சபாநாயகரிடம் வழங்கியுள்ளதாகவும் கூறினார்.எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்குப் பின்னர் துணை சபாநாயகர் ரவிசங்கர் அவரைப் பாராட்டினார். குற்றச்சாட்டுகளையும் அறிவுரைகளையும் எந்தவித இடையூறும் இல்லாமல் முன்னாள் முதல்-அமைச்சர் எடுத்துரைத்ததாகவும், அவரது பேச்சை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார். எளிமையாகவும், கண்ணியமாகவும், வஞ்சகம் மற்றும் வம்பு இல்லாமல் பேசியதற்காக எடப்பாடி பழனிசாமியை பாராட்டுவதாகவும் ரவிசங்கர் தெரிவித்தார்.