எண்ணூர் கடலில் மாயமான கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
10 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

எண்ணூர் கடலில் மாயமான கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு

எண்ணூர் கடலில் மாயமான கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரையில் நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவர், இன்று காலை பெரிய குப்பம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பர்மா நகரைச் சேர்ந்த முகமது பைசல் (18), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று (திங்கட்கிழமை) மாலை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களான சமீர், சாருக், முகமது கைப், யுவராஜ் ஆகியோருடன் எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரைக்குச் சென்றார். அங்கு அனைவரும் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கிய முகமது பைசல், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். அவருடன் கடலில் இருந்தவர்களில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எண்ணூர் போலீசார், கடலோரக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் மாயமான மாணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் முகமது பைசலின் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து அங்கு சென்ற எண்ணூர் போலீசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.