தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 9 பேர் கொண்ட கும்பலை கோவை மாநகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த கும்பல் போலீசாரிடம் சிக்காமல் இருக்க டெல்லியில் தலைமறைவாக இருந்ததுடன், விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவை குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்களை வழிமறித்த மர்ம கும்பல், கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறித்துச் சென்றது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்து போலீசார் கும்பலை பிடிக்க முயன்றனர். அப்போது காரில் இருந்தபடியே போலீசார் மீது மிளகாய்ப் பொடியை தூவி, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. கோவையில் இருந்து தப்பிய அவர்கள் தேனி மாவட்டத்திற்குச் சென்றனர். அங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக டெல்லிக்குச் சென்று சில மாதங்கள் தலைமறைவாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் விமானம் மூலம் மீண்டும் தமிழகத்திற்கு வந்த கும்பல், சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் ஒருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு மீண்டும் கோவைக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இந்த கும்பலை பிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ரம்யாபாரதி மற்றும் துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் உத்தரவிட்டனர். இதையடுத்து குனியமுத்தூர் இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன், சப்-இன்ஸ்பெக்டர் தாமரை செல்வன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செல்போன் எண்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதன் மூலம் கோவை உக்கடம் பகுதியில் கும்பல் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், கும்பலின் தலைவன் உட்பட 9 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் (23), தஞ்சாவூரைச் சேர்ந்த மனோஜ் குமார் (26), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (24), கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை (25), மதுரையைச் சேர்ந்த அருண்பாண்டி (27), மதுரையைச் சேர்ந்த எஸ்.புவனேஷ் (22), சிவகங்கையைச் சேர்ந்த அருண் (20), மதுரையைச் சேர்ந்த ராமர் (23) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் (23) ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலின் தலைவனாக கூறப்படும் ஆகாஷ் மீது 25 குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அருண் மீது 31 வழக்குகளும், முத்துப்பாண்டி மீது 18 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மற்ற கூட்டாளிகள் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 9 பேரிடமும் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் இந்த கும்பல் கோவையில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் “தங்களை தொட்டுப்பார்த்தால் நடப்பதே வேறு” என்ற மிரட்டல் தொனியில் பேசும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.