தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர் ஒருவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் நாளை கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு கூட்டுறவுத் துறை மூலம் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், மதுரவாயல் ரேஷன் கடையில் தரமற்ற வெங்காயம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளரைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் இணைப் பதிவாளர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம், பணிநீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதற்காக நாளை காலை 9 மணி முதல் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபடவும், பின்னர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மண்டல இணைப் பதிவாளர் அலுவலகங்களில் திரண்டு கோரிக்கைகளை முன்வைக்கவும் முடிவு செய்துள்ளது. பணிநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை இதுதொடர்பாகச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தினேஷ்குமார் மற்றும் தலைவர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், தரமற்ற வெங்காயம் தொடர்பான விவகாரத்தில் ரேஷன் கடைப் பணியாளர் ஒருவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது நியாயமற்றது எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை தொடர்பாகக் கூட்டுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து முறையிட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டபோதிலும், இதுவரை பணிநீக்க உத்தரவு ரத்து செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வெங்காயத்தின் தரத்தை ஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவில் குழுக்களும், ஐந்து கடைகளுக்கு ஒரு கண்காணிப்புக் குழுவும் அமைத்து ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டதாகக் கூறியுள்ள சங்க நிர்வாகிகள், அந்த ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டனவா, வெங்காயத்தின் தரம் குறித்து அதிகாரிகள் சான்றளித்தார்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ரேஷன் கடைகளுக்கு தரமற்ற வெங்காயத்தை அனுப்பியவர்கள் யார், கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயித்தவர்கள் யார், சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வெங்காயத்தைத் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது எந்த வகையில் நியாயம் என்றும், விவகாரத்தின் உண்மையான காரணங்களை ஆராயாமல் பணியாளரின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதை ஏற்க முடியாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாவட்ட அலுவலகங்களில் திரளும் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பணியாளருக்கு நீதி கிடைக்கவும், தற்காலிகப் பணிநீக்க உத்தரவை ரத்து செய்யவும் வலியுறுத்தி நாளை நடைபெறும் போராட்டத்தில் அனைத்து ரேஷன் கடைப் பணியாளர்களும் பங்கேற்க வேண்டும் எனச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்துடன் இணைந்த அலுவலகப் பணியாளர்கள் சங்கம், மகளிர் அமைப்புகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், ஓய்வுபெற்றோர் சங்க வழிகாட்டுதல் குழு மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், போராட்டம் குறித்த தகவலை அனைத்துப் பணியாளர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பாகத் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக ஏற்கெனவே தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு பணியாளருக்கு ஏற்பட்ட பாதிப்பு, எதிர்காலத்தில் மற்றவர்களுக்கும் ஏற்படலாம் என்பதால், பதவி மற்றும் மாவட்ட வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்றும் சங்க நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.