தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, உள்துறை செயலாளர் மணிவாசன் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, உள்துறை செயலாளராகப் பணியாற்றி வந்த மணிவாசன், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறுதொழில் மேலாண்மைக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த கார்த்திக், புதிய உள்துறை செயலாளராகப் பொறுப்பேற்க உள்ளார். மின்வாரிய நிர்வாக இயக்குநராக இருந்த அருண் ராய், நிதித்துறையின் செலவினங்கள் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பில் இருந்த வெங்கடேஷ், வேளாண்மைத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, மின்வாரிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனுடன், மின் உற்பத்திக் கழகத்தின் தலைவராகவும் அவர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த சரண்யா, தாம்பரம் மாநகராட்சிஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்யாறு சார் ஆட்சியராகப் பணியாற்றிய அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கிறார். குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநராக இருந்த சிவகிருஷ்ண மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த வைத்தியநாதன், குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்தப் பணியிட மாற்றங்கள் தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.