உளுந்தூர்பேட்டையில் இளைஞரை சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று தாக்கி நகை, பணம் கொள்ளை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Sep 2026 www.thinathulir.com

உளுந்தூர்பேட்டையில் இளைஞரை சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று தாக்கி நகை, பணம் கொள்ளை

உளுந்தூர்பேட்டையில் இளைஞரை சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று தாக்கி நகை, பணம் கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்த இளைஞரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து தாக்கியதுடன், அவரிடம் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த வசந்தவேல், புதன்கிழமை தனது வேலைகளை முடித்துவிட்டு தனியாக வீட்டிற்கு புறப்பட்டார். நைனாகுப்பம் மற்றும் மத்தியனூர் கிராமங்களுக்கு இடையே ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த 5 பேர் அவரை திடீரென வழிமறித்தனர். பின்னர் வசந்தவேலை வலுக்கட்டாயமாக அருகில் உள்ள சவுக்கு தோப்புக்குள் அழைத்துச் சென்ற அந்த கும்பல், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டனர். இதனையடுத்து வசந்தவேலின் செல்போனையும் பறித்த கும்பல், அதில் இருந்த கூகுள் பே செயலி மூலம் ரூ.28 ஆயிரத்தை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் பலத்த காயமடைந்த வசந்தவேல், ரத்த வெள்ளத்தில் கிடந்தபடி உதவி கேட்டு அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதியினர் அங்கு வருவதற்குள், மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. பின்னர் பொதுமக்கள் வசந்தவேலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. அசோகன் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு சென்று வசந்தவேலிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஷஹ்னாஸ் இன்று காலை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பட்டப்பகலில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய 5 பேர் கொண்ட மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.