கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) காலை முதல் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினசரி துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு, நிர்வாகத்தின் சார்பில் உரிய வாழ்வாதார உரிமைகள் வழங்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, மாத ஊதியத்தை தாமதமின்றி உரிய காலத்தில் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், நகரின் பல்வேறு வார்டுகளில் குப்பைகளை அகற்றுதல், சாக்கடைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான கையுறைகள், முகக்கவசங்கள், கூடைகள் மற்றும் பிற தூய்மைப் பணி உபகரணங்களை நகராட்சி நிர்வாகமே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய வீதிகள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வழக்கமாக நடைபெறும் குப்பை சேகரிப்பு பணிகள் இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், குப்பைகள் தேங்குவதால் கொசுத்தொல்லை மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படக்கூடும் என்பதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது கோரிக்கைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து, அவற்றை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.