உலக அளவில் அதிக செல்வாக்கு செலுத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்களின் பட்டியலில் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2026-ம் ஆண்டுக்கான உலகளாவிய இந்தியர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொத்தம் 236 தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தலைமையில் இயங்கும் 200 நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 15 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் மற்றும் அவர்கள் தலைமையிலான நிறுவனங்களின் மதிப்பு விவரம்: 1. சுந்தர் பிச்சை – ஆல்பபெட் (கூகுள்) – 4.2 டிரில்லியன் டாலர். 2. சத்யா நாதெல்லா – மைக்ரோசாப்ட் – 2.6 டிரில்லியன் டாலர். 3. சஞ்சய் மெஹ்ரோத்ரா – மைக்ரான் டெக்னாலஜி – 1.4 டிரில்லியன் டாலர். கடந்த 2024-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஒப்பிடும்போது, ஆல்பபெட் நிறுவனத்தின் மதிப்பு 98 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு மாறாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்பு அதே காலகட்டத்தில் 17 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்திய வம்சாவளி நிர்வாகிகள் தலைமையிலான நிறுவனங்களின் மொத்த மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி இந்த முன்னேற்றத்துக்கு முக்கியப் பங்களிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் உலகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. மேலும், 2025-ம் ஆண்டில் இவற்றின் ஒட்டுமொத்த வருவாய் 2.5 டிரில்லியன் டாலர்களாகவும், நிகர லாபம் 416 பில்லியன் டாலர்களாகவும் பதிவாகியுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள 200 நிறுவனங்களில் 103 நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டோ அல்லது அதனைத் தங்களது செயல்பாடுகளுடன் இணைத்தோ இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களின் மொத்த மதிப்பு மட்டும் 10.7 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள், சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து தங்களது செல்வாக்கையும் பங்களிப்பையும் விரிவுபடுத்தி வருவதை வெளிப்படுத்துகின்றன.