எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் உதய்வீர் சித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிச்சுற்றில் 8 வீரர்கள் களமிறங்கினர். இதில் இலக்கைத் துல்லியமாகச் சுட்ட உதய்வீர் சித்து, மொத்தம் 246.6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துத் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இறுதிப்போட்டியின் கடைசி இரண்டு சுற்றுகளில் முறையே 10.2 மற்றும் 9.8 புள்ளிகளைப் பெற்றது அவரது வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது. அவருக்கு அடுத்தபடியாக 0.5 புள்ளிகள் மட்டுமே குறைவாகப் பெற்ற ஜெர்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸ் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இத்தாலி வீரர் பாவ்லோ மோனா 219.8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். 24 வயதான உதய்வீர் சித்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இதற்கிடையே, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரப்ஜோத் சிங், இந்த உலகக்கோப்பை போட்டியில் தகுதிச்சுற்றிலேயே வெளியேறினார்.