உலக செஸ் சாம்பியன்ஷிப்: சிந்தாரோவுடன் மோதும் குகேஷ்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

29 Jul 2026 www.thinathulir.com

உலக செஸ் சாம்பியன்ஷிப்: சிந்தாரோவுடன் மோதும் குகேஷ்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: சிந்தாரோவுடன் மோதும் குகேஷ்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 15-ம் தேதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளது.‘பிடே’ உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நடப்பு சாம்பியனான இந்தியாவின் குகேஷ், கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 20 வயது வீரர் ஜவோகிர் சிந்தாரோவை எதிர்கொள்கிறார். இந்த இறுதிப்போட்டி நடைபெறும் இடம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, குகேஷ் - சிந்தாரோவ் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெனீவாவில் நடைபெறும். கிளாசிக்கல் முறையில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 14 சுற்றுகள் இடம்பெறும். இதில் முதலில் 7.5 புள்ளிகளை பெறும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். இரு வீரர்களும் 7-7 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தால், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறைக்கு செல்லப்படும்.கடந்த 2024-ம் ஆண்டு இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த 20 வயது குகேஷ், இந்த முறை தனது பட்டத்தை தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு செஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) இடைக்கால தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில், உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்த இந்தியா, அமெரிக்கா, சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் தெரிவித்தன. அவற்றின் முன்மொழிவுகளை பரிசீலித்த பின்னர், பொதுவான இடத்தில் போட்டியை நடத்த பிடே முடிவு செய்ததாக தெரிவித்தார்.மேலும், பல்வேறு நாடுகள் மற்றும் கலாசாரங்களை இணைக்கும் சிறப்புமிக்க நகரமான ஜெனீவாவில் இந்த போட்டி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் உள்ள செஸ் ரசிகர்கள் ஆன்லைன் வாயிலாக இந்த முக்கியமான போட்டியை பார்வையிட முடியும் என்றும், உள்ளூர் ரசிகர்கள் நேரில் உலகத்தரமான போட்டியை காணும் வாய்ப்பை பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.