உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுமார் 1,600 கிலோ கலப்பட பால்கோவாவை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதன் மதிப்பு ரூ.3.20 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் கலப்பட இனிப்புகள் மற்றும் பால் பொருட்களின் விற்பனையைத் தடுக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஹாபூர் மாவட்டம் தவுலானா பகுதியில் உள்ள லால்பூர் கிராமத்தில் சட்டவிரோதமாக பால்கோவா தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகர் மிஸ்ரா தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு 8 மணியளவில் சம்பந்தப்பட்ட இடத்தில் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது, போதிய சுகாதார வசதிகளின்றி விற்பனைக்காக அதிக அளவில் பால்கோவா தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில், பாமாயில் மற்றும் வனஸ்பதி (டால்டா) உள்ளிட்ட குறைந்த விலைப் பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட 1,600 கிலோ கலப்பட பால்கோவாவை அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட பொருளின் மதிப்பு சுமார் ரூ.3.20 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. எஞ்சியிருந்த பால்கோவாவை ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் குழி தோண்டி மண்ணில் புதைத்து அதிகாரிகள் அழித்தனர். பண்டிகைக் காலங்களில் உடல்நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கலப்பட உணவுப் பொருட்களை வாங்குவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், நம்பகமான கடைகளில் மட்டுமே இனிப்புகளை வாங்க வேண்டும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.