உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய கொடையாளர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசு மற்றும் சால்வை அணிவித்து அரசு சார்பில் கௌரவிக்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (23.09.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று, உறுப்பு தான கொடையாளர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, 2025 செப்டம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உறுப்பு தானம் செய்த 312 கொடையாளர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவர்களது குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசு மற்றும் சால்வை அணிவித்து கௌரவித்தார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு தானங்களைப் பெறுவதில் சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. உறுப்பு தானமாக பெறப்படும் உறுப்புகளை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் குறித்த நேரத்துக்குள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல உதவும் வகையில் பசுமை வழித்தடங்களை ஏற்படுத்தி வரும் சென்னை பெருநகர காவல்துறைக்கும் கேடயம் வழங்கப்பட்டது. இந்த விருதை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் சாமுண்டீஸ்வரி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சிக்கு முன்னதாக, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் ஆண்டறிக்கையும் வெளியிடப்பட்டது. செப்டம்பர் 23 ஏன் உறுப்பு தான விழிப்புணர்வு தினம்? 2008-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி சாலை விபத்தில் சிறுவன் ஹிதேந்திரன் மூளைச்சாவு அடைந்தார். அவரைக் காப்பாற்ற முடியாது என்பதை அறிந்த அவரது பெற்றோர்களான டாக்டர் அசோகன் மற்றும் டாக்டர் புஷ்பாஞ்சலி, மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். இந்த சம்பவம் அப்போது ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றதைத் தொடர்ந்து, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நாடு முழுவதும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹிதேந்திரனின் நினைவு நாளான செப்டம்பர் 23-ம் தேதியை மாநில அளவில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுவதுடன், தானம் செய்ய முன்வந்த அவர்களது குடும்பத்தினரும் அரசு சார்பில் கௌரவிக்கப்படுகின்றனர். ஹிதேந்திரனின் தாயார் டாக்டர் புஷ்பாஞ்சலிக்கு தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்பட்டுள்ளது. 2,550 கொடையாளர்களிடம் இருந்து 14,845 உறுப்புகள் தானம் தமிழ்நாட்டில் 2008 செப்டம்பர் 5-ம் தேதி மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் 2015-ம் ஆண்டு இந்தத் திட்டம் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமாக (TRANSTAN) உருவாக்கப்பட்டது. உறுப்பு தானம் இரண்டு வகைகளாக உள்ளது. உயிருடன் இருக்கும் ஒருவரிடமிருந்து உறுப்பு தானம் பெறப்படுவதும், மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து உறுப்புகள் பெறப்படுவதும் அவற்றில் அடங்கும். உயிருடன் இருப்பவரிடமிருந்து பெறப்படும் உறுப்பு தானத்தில், ஆரோக்கியமான நபரிடமிருந்து தேவையான உறுப்பு பெறப்பட்டு, உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நபருக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. இதற்கான அனுமதியை வழங்க சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மண்டல அளவிலான அங்கீகாரக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடம் இருந்து இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், குடல் மற்றும் கணையம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்படுகின்றன. தமிழ்நாட்டில் 2008 அக்டோபர் முதல் 2026 செப்டம்பர் வரை 2,550 கொடையாளர்களிடம் இருந்து மொத்தம் 14,845 உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. இதில் 1,041 இதயங்கள், 1,089 நுரையீரல்கள், 2,251 கல்லீரல்கள், 4,489 சிறுநீரகங்கள், 50 கணையங்கள், 41 சிறுகுடல்கள், 5 வயிறுகள் மற்றும் 9 கைகள் என 8,975 முக்கிய உறுப்புகள் அடங்கும். மேலும், 1,113 இருதய வால்வுகள், 3,774 கார்னீயாஸ், 416 தோல், 2 ரத்த நாளங்கள், 536 எலும்புகள், 26 முதுகெலும்பு மற்றும் டிஸ்க் திசுக்கள், 3 வயிற்று மடல்கள் என 5,870 இதர உறுப்புகள் மற்றும் திசுக்களும் தானமாக பெறப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும், அதாவது 2025 செப்டம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரை, 312 கொடையாளர்களிடமிருந்து 1,699 உறுப்புகள் மற்றும் திசுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 78 இதயங்கள், 106 நுரையீரல்கள், 254 கல்லீரல்கள், 523 சிறுநீரகங்கள், 2 கணையங்கள், 12 சிறுகுடல்கள், 9 கைகள், 40 இருதய வால்வுகள், 483 கார்னீயாஸ், 104 தோல் மற்றும் 96 எலும்புகள் அடங்கும். கொடையாளர்களுக்கு அரசு மரியாதை மூளைச்சாவுக்குப் பிறகு உறுப்புகளை தானமாக வழங்கிய கொடையாளர்களின் இல்லங்களுக்கு சென்று தமிழ்நாடு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு மரியாதையும் செலுத்தப்படுகிறது. 2023 செப்டம்பர் முதல் 2026 செப்டம்பர் வரை தமிழ்நாட்டில் 825 உறுப்பு தான கொடையாளர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் உலக அளவில் முதலிடத்தில் இருப்பதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஒன்றிய அரசின் தேசிய விருதை தமிழ்நாடு தொடர்ந்து 10 ஆண்டுகள் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் இந்திய அளவில் உறுப்பு தானத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், தமிழ்நாட்டுக்கான "சிறந்த மாநிலத்திற்கான" விருதை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் ச.உமா, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் சாமுண்டீஸ்வரி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் வ.லோகநாயகி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் ராஜ்மோகன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் டாக்டர் ஆர்.மனோ ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.