தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளையொட்டி முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: உடலுறுப்பு தானத்தின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், சிறுவன் ஹிதேந்திரனின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23-ம் தேதி தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஒருவர் உயிரிழந்த பிறகும், அவரது உடலுறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்வது உயர்ந்த மனிதநேயச் செயலாகும். உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்போருக்கு தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு உறுப்பும் புதிய நம்பிக்கையையும் வாழ்க்கையையும் அளிக்கிறது. மனிதநேயத்தின் அடையாளமாக, பல உயிர்களுக்கு மறுவாழ்வை வழங்கிய உடலுறுப்புக் கொடையாளர்கள் அனைவரையும் இந்த நாளில் பெருமையுடன் நினைவுகூர்வோம் என முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.