உசிலம்பட்டி டிராவல்ஸ் அதிபர் கொலை: முன்விரோதம் காரணமா?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
27 Sep 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Sep 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

உசிலம்பட்டி டிராவல்ஸ் அதிபர் கொலை: முன்விரோதம் காரணமா?

உசிலம்பட்டி டிராவல்ஸ் அதிபர் கொலை: முன்விரோதம் காரணமா?

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட 50 வயது நபர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்தவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பவானிசாகர் தொப்பம்பாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத 50 வயது நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், முடுக்கன்துறை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்பாபு பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கிடைத்த பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த நபரின் கழுத்து எலும்புகள் முறிந்திருந்தது தெரியவந்தது. இதனால் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, உயிரிழந்தவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீனிவாச நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (50) என்பது தெரியவந்தது. டிராவல்ஸ் தொழில் நடத்தி வந்த அவர், வாடகை காரையும் ஓட்டி வந்துள்ளார். அவரது மனைவி ரமாபிரபா என்பதும், தம்பதிக்கு 2 மகள்கள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெயச்சந்திரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வாடகை காரை ஓட்டிச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து வந்ததாக அவரது மனைவி ரமாபிரபா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் சடலமாக கிடந்த இடத்தின் அருகே கார் காணப்படவில்லை. இதனால் மர்ம நபர்கள் ஜெயச்சந்திரனை கொலை செய்து, அவரது உடலை கீழ்பவானி வாய்க்காலில் வீசிவிட்டு காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயச்சந்திரன் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.