தமிழகத்தின் பாரம்பரிய பனைப் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து ஐரோப்பிய நாடான பல்கேரியாவுக்கு முதன்முறையாக பனை வெல்லத்தூள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் பாரம்பரிய பனை சார்ந்த பொருட்களை வெளிநாட்டுச் சந்தைகளில் அறிமுகப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பல்கேரியாவின் வார்னா நகருக்கு 1.755 மெட்ரிக் டன் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பனை வெல்லத்தூள் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது. பனை மலர்களிலிருந்து பெறப்படும் தேனை அடிப்படையாகக் கொண்டு இந்த வெல்லத்தூள் தயாரிக்கப்படுகிறது. ஈரோடு பகுதியில் சுமார் 137 ஏக்கர் நிலப்பரப்பில் பனை மரங்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இந்த முயற்சி, தமிழகத்தின் பாரம்பரிய பனைப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த உதவுகிறது. மேலும், உள்நாட்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி மூலம் விவசாயிகளுக்கு 15 முதல் 22 சதவீதம் வரையிலும், உற்பத்தியாளர்களுக்கு சுமார் 17 சதவீதம் வரையிலும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி நடவடிக்கை, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், தங்களது பாரம்பரிய உற்பத்திப் பொருட்களை உலகச் சந்தைக்கு கொண்டு செல்லும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.