ஈரோடு அருகே கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை ஒற்றை யானை வழிமறித்த நிலையில், அதனை அச்சமின்றி எதிர்கொண்ட ஓட்டுநர் பாசத்துடன் பேசியதுடன், விநாயகர் சதுர்த்தி வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பாதை அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் நடமாடுவது அவ்வப்போது நிகழ்கிறது. குறிப்பாக, சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகளை நோக்கி சில யானைகள் சாலைக்கு வருவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த வழியாக கரும்பு ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை பார்த்ததும், வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை சாலைக்கு வந்தது. பின்னர் லாரியின் குறுக்கே நின்றதால், ஓட்டுநர் வாகனத்தை மெதுவாக நிறுத்தினார். யானையை பார்த்து பதற்றமடையாத ஓட்டுநர், அதனிடம் பாசத்துடன் பேசினார். “நாளைக்கு உனக்கு பிறந்தநாளு... ஒரு கத்தை கரும்பு எடுத்துக்கோ” எனக் கூறிய அவர், விநாயகரின் மறு உருவமாக கருதப்படும் யானைக்கு முன்கூட்டியே விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார். ஓட்டுநரின் குரலைக் கேட்டதும் அமைதியான யானை, லாரிக்கு எந்தவித சேதமும் ஏற்படுத்தாமல், அதில் இருந்த ஒரு கத்தை கரும்பை தனது தும்பிக்கையால் எடுத்துக்கொண்டது. பின்னர் லாரிக்கு வழிவிட்டு சாலையோரமாக நகர்ந்த யானை, தான் எடுத்துச் சென்ற கரும்புகளை சாப்பிடத் தொடங்கியது. யானையிடம் ஓட்டுநர் பாசத்துடன் பேசிய இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அங்கிருந்த சக வாகன ஓட்டிகள் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.