ஈரானில் நடைபெற்று வரும் போரின் தாக்கம் அமெரிக்காவின் எரிபொருள் சந்தையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.தற்போது அமெரிக்காவில் ஒரு கேலன் டீசல் 5.85 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.552.42 ஆகும். ஒரு கேலன் என்பது சுமார் 3.785 லிட்டர் கொள்ளளவு கொண்டது. டீசல் விலை உயர்வு அமெரிக்க அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, நவம்பரில் நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தல்களில் வாக்காளர்களின் முக்கிய கவனம் பொருளாதாரச் சூழல் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் மீது திரும்ப வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.டீசலைத் தொடர்ந்து பெட்ரோல் விலையும் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. எனினும், டீசலுடன் ஒப்பிடும்போது பெட்ரோல் விலை உயர்வின் வேகம் குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு கேலன் பெட்ரோல் 3.20 டாலராக இருந்த நிலையில், தற்போது அது 4.15 டாலராக உயர்ந்துள்ளது.இதற்கிடையில், சமீப நாட்களில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், அமெரிக்காவில் டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.