ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது அமெரிக்கா இதுவரை பயன்படுத்தாத புதியவகை ஏவுகணையை முதன்முறையாக பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது திடீர் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டன. இந்த தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல்களை நடத்தியது.இரு தரப்புக்கும் இடையேயான மோதல் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் கடந்த 6 மாதங்களாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்த சூழலில், ஈரான் மீதான தாக்குதலின்போது அமெரிக்க ராணுவம் வித்தியாசமான முறையில் செயல்படும் ஒரு ஏவுகணையை முதன்முறையாக பயன்படுத்தியிருப்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, வழக்கமான ஏவுகணைகளைப் போல இலக்குப் பகுதியிலுள்ள கட்டிடங்கள் மற்றும் பொருட்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவதுடன், அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் தயாரிப்பு வகையைச் சேர்ந்த இந்த ஏவுகணை, மற்ற ஏவுகணைகளிலிருந்து மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தாக்கும்போது மிகப்பெரிய அளவில் வெடிகுண்டு சிதறல்கள் உருவாகும் வகையில் இது செயல்படுகிறது. அவை ஏராளமான சிறு துண்டுகளாகப் பிரிந்து பல்வேறு திசைகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இதன் காரணமாக ஏவுகணை தாக்கிய இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்தவர்கள்கூட உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா இந்த வகை ஏவுகணையை முதன்முறையாக பயன்படுத்தியிருப்பதாக ஏர்வார்ஸ் அமைப்பும் பாதுகாப்பு நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.இதன் ஒரு பகுதியாக, ஈரானின் லாமெர்ட் நகரில் 3 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஏவுகணைகள் வெடித்த இடத்திலிருந்து 50 மீட்டர் வரையிலான சுற்றளவில் வசித்தவர்களும் உயிரிழந்துள்ளனர். இதைத் தவிர, அதைவிட 3 மடங்கு தொலைவிலான பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட மொத்தம் 21 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.