தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய் அவருக்கு வீர வணக்கம் செலுத்தி சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதியை நிலைநாட்டவும் தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்துப் போராடியவர் இமானுவேல் சேகரனார் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பிறந்தநாளில் அவரைப் போற்றித் தனது வீர வணக்கங்களைச் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சமத்துவம் மற்றும் சுயமரியாதைக்காகக் குரல் கொடுத்ததுடன், விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர் போராடியதாக விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். இமானுவேல் சேகரனாரின் தியாகங்கள் நிறைந்த வரலாறு என்றும் போற்றப்பட வேண்டியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இமானுவேல் சேகரனார் காட்டிய பாதையில் பயணித்து, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும், சமத்துவமும் சகோதரத்துவமும் அனைத்து இடங்களிலும் செழித்தோங்கவும் இந்த நாளில் உறுதியேற்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.