நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் கடந்த 26-ந்தேதி இமயமலையில் இரண்டு பெரிய பனிப்பாறைகள் உடைந்து, போடேகோஷி நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில், இதுபோன்ற பனிப்பாறை பேரழிவுகள் எதிர்காலத்திலும் தொடர வாய்ப்புள்ளதாக சீன காலநிலை நிபுணர் எச்சரித்துள்ளார்.சீனாவின் தேசிய பருவநிலை மையத்தின் துணை இயக்குனர் காவோ ராங் கூறியதாவது: கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திபெத் பீடபூமியில் உள்ள பனிப்பாறைகளின் பரப்பளவு 24 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளது. இதுவரை சுமார் 7 ஆயிரம் சிறிய பனிப்பாறைகள் முழுமையாக மறைந்துவிட்டன. மேலும், வரும் ஆண்டுகளில் திபெத் பீடபூமி முழுவதும் உள்ள பனிப்பாறைகளின் கட்டமைப்பு வலிமை தொடர்ந்து குறையக்கூடும். இதன் காரணமாக பனிப்பாறை பேரழிவுகள் அடிக்கடி ஏற்படும் சூழல் உருவாகலாம். அவை ஏற்படுத்தும் பாதிப்பின் தீவிரமும் அதிகரிப்பதுடன், அடுத்தடுத்த தொடர் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்தார்.