விழுப்புரம் அருகே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவது தொடர்பாக பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், இரு தரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் குமாரக்குப்பத்தைச் சேர்ந்த மாணவருக்கும், நரையூரைச் சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிடுவதில் யார் அதிகமாக இருக்கிறார்கள் என்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நரையூரைச் சேர்ந்த மாணவரின் நண்பர்களான 4 மாணவர்கள் வளவனூர் பேருந்து நிறுத்தத்துக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த குமாரக்குப்பம் மாணவரை அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மறுபுறம், குமாரக்குப்பத்தைச் சேர்ந்த மாணவரின் நண்பர்கள் 4 பேர், நரையூரைச் சேர்ந்த மாணவரை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாகவும் இரு தரப்பினரும் தனித்தனியாக வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார்களின் அடிப்படையில் இரு தரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.