இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா மீது நகை திருட்டு வழக்குப்பதிவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா மீது நகை திருட்டு வழக்குப்பதிவு

இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா மீது நகை திருட்டு வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் வினோத்குமாரின் மனைவி மதுமிதா. பிரபல யூடியூபரான இவர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். விதவிதமான ஆடைகள் மற்றும் நகைகளுடன் தோன்றுவது, கட்டுக்கட்டாக பணத்தை வைத்திருப்பது, பணமழையில் நனைவது போன்ற காட்சிகளை ரீல்ஸ் வீடியோக்களாக வெளியிட்டு அவர் பிரபலமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு மதுமிதாவின் குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் வீடு வாங்கி குடியேறினர். கடந்த 24-ம் தேதி மாலை மதுமிதா தனது கணவருடன் வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் இருந்த 118 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, மதுமிதா மீண்டும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், மதுமிதா மீது 5 பவுன் நகையை திருடியதாக ராஜாக்கமங்கலம் போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளனர். நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகாரில், பிசியோதெரபி சிகிச்சையின்போது மதுமிதாவுடன் அறிமுகம் ஏற்பட்டதாக பேச்சிமுத்து தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு நெல்லை நீதிமன்றம் அருகே தனது வாகனத்தில் மதுமிதா ஏறியதாகவும், பின்னர் அவரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டுக்குச் சென்றபோது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயின் காணாமல் போனதை அறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நெல்லை பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுவதால், மேல்நடவடிக்கைக்காக வழக்கை நெல்லை மாவட்டத்துக்கு மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.