சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான ஹரிஷ் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், யூடியூபர் ஜேசன் சாமுவேலை கானத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (26), யூடியூபராகவும் இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும் இருந்து வந்தார். நிதி முதலீடு மற்றும் சேமிப்பு தொடர்பான வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில், மற்றொரு யூடியூபரான ஜேசன் சாமுவேலுக்கும் ஹரிஷுக்கும் இடையே இணையவழியில் கருத்து மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஹரிஷ் வெளியிட்ட வீடியோக்களை விமர்சித்து ஜேசன் சாமுவேல் பதிவுகளை வெளியிட்டதாகவும், இதனால் ஹரிஷ் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிகிறது. இதற்கிடையே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கானத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று ஹரிஷின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ஹரிஷின் தந்தை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மகன் குறித்து மற்றொரு யூடியூபர் அவதூறு பரப்பியதுடன், தொடர்ந்து இணையவழியாக அச்சுறுத்தல்களையும் விடுத்ததாகவும், இதுவே தனது மகனின் தற்கொலைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், ஹரிஷைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் ஜேசன் சாமுவேல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஹரிஷ் தற்கொலை வழக்கில் ஜேசன் சாமுவேலை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரிஷ் குறித்து அவதூறு வீடியோக்களை வெளியிட்டு அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.