காங்கிரஸ் கட்சியின் அரசியல் அணுகுமுறையையும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைவிட, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எதிர்க்கட்சிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் ரூ.8,941 கோடி மதிப்பிலான டெல்லி குடிநீர் வாரியத்தின் 33 திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றுப் பேசினார். அப்போது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் செயல்பாடுகளைக் குறிப்பிட்ட அவர், தேர்தல் வெற்றியைப் பெறுவதற்கு மக்களின் ஆதரவைப் பெறுவதே முக்கியம் என வலியுறுத்தினார். அவர் மேலும் பேசியதாவது: மக்கள் அளித்துள்ள தேர்தல் தீர்ப்பை அரசியல் உத்திகளாலோ, கூட்டுப் போராட்டங்களாலோ மாற்றிவிட முடியாது. தேர்தலில் வெற்றி பெற விரும்பும் அரசியல் கட்சிகள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் மட்டும் எந்தப் பலனையும் அளிக்காது. ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மக்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், தற்போது எஞ்சியுள்ள அரசியல் செல்வாக்கையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். பாஜக அடுத்த 30 ஆண்டுகளுக்கும் ஆட்சியில் இருக்கும் என்று நான் கூறியபோது, எதிர்க்கட்சிகள் மீண்டும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் எதிர்மறையான அரசியல் போக்கால், அடுத்த 30 ஆண்டுகளுக்குக்கூட அக்கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது என்று அமித் ஷா கூறினார். பாஜக தேர்தலில் வெற்றி பெறும்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக அமையும்போது மட்டுமே எதிர்க்கட்சிகள் அவற்றை ஏற்றுக்கொள்கின்றன என்றும் விமர்சித்தார். கேரளா, இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றபோதும், அதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் ஆணையமும்தான் செயல்பாட்டில் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.