இந்தியாவுக்காக சர்வதேச எறிபந்து போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்கள் உள்பட பல்வேறு பதக்கங்களை வென்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அமர்தீப் குமார், தற்போது குடும்ப வறுமையால் காய்கறி விற்றும் வாடகைக் கார் ஓட்டியும் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.29 வயதான அமர்தீப் குமார், சர்வதேச எறிபந்து போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் பல பதக்கங்களை வென்றுள்ளார். ஆனால், தற்போது குடும்பத்தின் பொருளாதார நிலையை சமாளிக்கவும், பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தவும் ராஞ்சி நகர வீதிகளில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். இதனுடன் வாடகைக் காரையும் ஓட்டி வருகிறார்.தான் வென்ற தங்கப் பதக்கங்களை தனது சிறிய தற்காலிகக் கடையின் சுவரில் அமர்தீப் குமார் காட்சிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் சாதனை படைத்த விளையாட்டு வீரருக்கு உரிய வேலைவாய்ப்போ, அரசு சார்பிலான நிதியுதவியோ கிடைக்காததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.