இந்தியாவில் திருமணம் செய்தவர்கள் வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
12 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இந்தியாவில் திருமணம் செய்தவர்கள் வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்தியாவில் திருமணம் செய்தவர்கள் வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆந்திராவைச் சேர்ந்த என். ஸ்ரீதர் ரெட்டி என்பவர், கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என். கீதா பிரசாந்தி என்பவரை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, இருவரும் இங்கிலாந்து சென்றனர். அங்கு ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, மனைவியைப் பிரிந்து வாழத் தொடங்கினார் ஸ்ரீதர் ரெட்டி. இதற்கிடையில், முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்காக ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த அவர், பின்னர் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, இங்கிலாந்து குடியுரிமை பெற்ற ஸ்ரீதர் ரெட்டி, அங்குள்ள கேம்பிரிட்ஜ் கவுண்டி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 2014-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. இதையடுத்து, அதே ஆண்டு மார்ச் மாதம் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதனை அறிந்த முதல் மனைவி, 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது கணவர் மீது இருதார மணம் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் புகார் அளித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்ரீதர் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தான் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும், இரண்டாவது திருமணமும் அந்நாட்டிலேயே நடைபெற்றதால் இந்திய சட்டங்கள் தமக்குப் பொருந்தாது என்றும் அவர் வாதிட்டார். இந்த மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்து திருமணச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத 'திருமண முறிவு' என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டே இங்கிலாந்து நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். எனவே, அந்த வெளிநாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகும் எனக் கருத முடியாது என்றும் தெளிவுபடுத்தினர். மேலும், இந்தியாவில் இந்து முறைப்படி நடைபெற்ற முதல் திருமணம் சட்டப்படி தொடர்ந்து அமலில் இருக்கும்போது, வெளிநாட்டில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை காரணமாகக் கூறி இந்திய சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் 494-வது பிரிவின்படி, இருதார மணக் குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அமர்வு குறிப்பிட்டது. இதையடுத்து, ஸ்ரீதர் ரெட்டிக்கு எதிரான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், அவரது மனுவைத் தள்ளுபடி செய்தனர். அதேவேளையில், சதித்திட்டத்தில் பெற்றோர் மற்றும் இரண்டாவது மனைவிக்குத் தொடர்பு இருப்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.