இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 20-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வரிச்சலுகைகள் கிடைப்பதுடன், இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு நியூசிலாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான புதிய வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 27-ம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட ஏழாவது வர்த்தக ஒப்பந்தமாகும். இதன் மூலம் இந்தியாவின் செயல்பாட்டில் உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 2030-க்குள் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு 2025-26 நிதியாண்டில் இந்தியா–நியூசிலாந்து இடையிலான வர்த்தகம் 11 சதவீதம் சரிந்து, சுமார் ரூ.11 ஆயிரம் கோடியாக (1.15 பில்லியன் அமெரிக்க டாலர்) குறைந்தது. இந்த நிலையை மாற்றி, 2030-ம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை ரூ.35 ஆயிரம் கோடியாக (7 பில்லியன் நியூசிலாந்து டாலர்) உயர்த்த ஒப்பந்தம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.2 லட்சம் கோடி (20 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதியளித்துள்ளது. இந்தியப் பொருட்களுக்கு நியூசிலாந்தில் வரி விலக்கு ஒப்பந்தம் அமலான முதல் நாளிலிருந்தே இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தையில் முழுமையான வரிவிலக்கு கிடைக்கிறது. இதற்கு முன்பு சில பொருட்களுக்கு 10 சதவீதம் வரை விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி, தோல் பொருட்கள், காலணிகள், ரத்தினங்கள், நகைகள், மருந்துகள் மற்றும் பொறியியல் பொருட்கள் தயாரிக்கும் தொழில்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விவசாயத் துறைக்கு பாதுகாப்பு இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் உள்நாட்டு பால் உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் உணர்திறன் மிக்க பால் பண்ணைத் துறையை நியூசிலாந்து பொருட்களின் இறக்குமதியிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மறுபுறம், நியூசிலாந்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்கு உடனடியாக வரி நீக்கப்பட்டுள்ளது. இந்த வரிச்சலுகை படிப்படியாக 82 சதவீதமாகவும், ஒப்பந்தம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது 95 சதவீதமாகவும் அதிகரிக்கும். இதன் மூலம் கிவி பழம், ஆப்பிள், செம்மறி ஆட்டு இறைச்சி, கம்பளி, தேன் மற்றும் மரப் பொருட்கள் உள்ளிட்ட நியூசிலாந்து தயாரிப்புகள் இந்திய நுகர்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தியர்களுக்கு 5,000 தற்காலிக விசாக்கள் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தகுதிபெறும் இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு நியூசிலாந்து 5,000 தற்காலிக வேலைவாய்ப்பு விசாக்களை வழங்க உள்ளது. இதனால் இந்தியர்களுக்கு அந்நாட்டில் பணிபுரிவதற்கான கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். இந்திய மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், படிப்பை முடித்த பிறகு அங்கு தங்கி வேலை செய்வதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பட்டதாரிகள் மூன்று ஆண்டுகள் வரையும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் நான்கு ஆண்டுகள் வரையும் நியூசிலாந்தில் தங்கி பணிபுரிய அனுமதி வழங்கப்படும்.