மத்திய பிரதேச மாநிலம் சியோபூரில் அமைந்துள்ள கூனோ தேசிய பூங்காவில், இந்தியாவில் பிறந்து வளர்ந்த பெண் சிறுத்தையான ‘கே.ஜி.பி.12’ நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்தியாவில் பிறந்து வளர்ந்த பெண் சிறுத்தைகளில் குட்டிகளை ஈன்றதில், ‘முகி’ என்ற சிறுத்தைக்கு அடுத்ததாக தற்போது ‘கே.ஜி.பி.12’ இரண்டாவது சிறுத்தையாகியுள்ளது. நான்கு குட்டிகளுடன் தாய் சிறுத்தை ஓய்வெடுக்கும் காட்சிகள் வனத்துறையினரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன. தாய் மற்றும் குட்டிகள் ஒன்றுடன் ஒன்று பாசத்துடன் இருக்கும் தருணங்களும் கவனம் பெற்றுள்ளன. இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் ‘புராஜெக்ட் சீட்டா’ திட்டத்தின் கீழ், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் பிறந்த பெண் சிறுத்தை ஒன்று குட்டிகளை ஈன்றிருப்பது இதுவே முதல்முறை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய மண்ணில் சிறுத்தைகளை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சி முக்கியமான முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். புதிதாக பிறந்துள்ள நான்கு குட்டிகளும், அவற்றின் தாய் கே.ஜி.பி.12-ம் ஆரோக்கியமாக இருப்பதாக கூனோ தேசிய பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. குட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட பகுதி வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினரால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அதிநவீன கேமராக்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், தாய் சிறுத்தைக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள் குட்டிகளை ஈன்றுள்ள நிலையில், தற்போது இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த சிறுத்தையும் நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இதனால் கூனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. புதிய குட்டிகளின் வரவு பூங்கா ஊழியர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.