உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இந்திய விமானப்படையின் ‘சூர்யகிரண்’ சாகச விமானக் குழு சார்பில் முதல்முறையாக நடைபெற்ற பிரம்மாண்ட வான்வழி சாகச நிகழ்ச்சி நேற்று மற்றும் இன்று என 2 நாட்கள் நடைபெற்றது. நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் இடம்பெற்ற இந்த சாகசத்தை காண மாணவர்கள், என்.சி.சி. மாணவர்கள், ஸ்கவுட் இயக்கத்தினர் உள்ளிட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். இன்று நடைபெற்ற இறுதி நாள் நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்புத்துறை இணை மந்திரி சஞ்சய் சேத் நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த சாகச நிகழ்ச்சி ஒழுக்கம், துல்லியம் மற்றும் குழு ஒருங்கிணைப்பின் சிறப்பான வெளிப்பாடு என்றும், இந்திய விமானப்படையின் திறமைக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது வாழ்த்து செய்தியை வெளியிட்டிருந்தார். அதில், மூவண்ணக் கொடியின் நிறங்களை வானில் பிரதிபலிக்கும் வகையில் விமானிகள் மேற்கொண்ட சாகசங்கள் அவர்களின் துணிச்சலையும் துல்லியத்தையும் வெளிப்படுத்துவதாகவும், இது நாட்டுக்கே பெருமை சேர்க்கும் தருணம் என்றும் அவர் பாராட்டியிருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சூர்யகிரண்’ சாகச விமானக் குழு, ஆசியாவில் ஒரே நேரத்தில் 9 போர் விமானங்களை இயக்கி வான்வழி சாகசங்களை நிகழ்த்தும் ஒரே குழு என்ற சிறப்பை பெற்றுள்ளது. சாகச நிகழ்ச்சிகளை நடத்துவதோடு மட்டுமின்றி, ‘இந்திய விமானப்படையின் தூதுவர்கள்’ என்ற அடையாளத்துடன் செயல்பட்டு வரும் சூர்யகிரண் குழு, தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விமானப்படையின் திறன்களை உலகிற்கு எடுத்துக்காட்டி வருகிறது.