கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் இந்திய பகுதிக்குள் அத்துமீற முயன்றதாக கூறப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் இந்திய வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பிலும் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த சம்பவத்துக்கு பிறகு இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் கூடுதல் படைகளை குவித்தன. இதனால் பல மாதங்களாக எல்லையில் பதற்றமான சூழல் நீடித்ததுடன், இந்தியா-சீனா இடையேயான உறவிலும் பாதிப்பு ஏற்பட்டது. நிலையை சீராக்கி எல்லையில் நீடித்த அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இரு தரப்பினரும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே தொடர்ந்து சந்திப்புகள் நடைபெற்றன. எல்லை மோதல்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு பிரதிநிதிகளும் அவ்வப்போது சந்தித்து, பதற்றத்தை குறைப்பது மற்றும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெறுவது குறித்து வலியுறுத்தினர். இந்த தொடர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் மட்டத்திலும், பின்னர் இரு நாட்டு தலைவர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னரும் இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் சந்திப்புகள் தொடர்ந்தன. இந்த பேச்சுவார்த்தைகளில் கிழக்கு லடாக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியது. இருதரப்பு உறவில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் சீனா தனது படைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவ அமைச்சகம் கூறுகையில், சீனாவுடனான இந்தியாவின் வடக்கு எல்லையான லடாக் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக்கோடு அருகே சீனா கடந்த ஆண்டு கணிசமான அளவு படைகளை குறைத்துள்ளது. தற்போது கட்டுப்பாட்டுக்கோடு மற்றும் சீனாவின் பாரம்பரிய ராணுவ பயிற்சிப் பகுதிகளில் 10 ஒருங்கிணைந்த ஆயுதப்படைப்பிரிவு அளவிலான படைகள் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்திய ராணுவமும் அனைத்து நிலைகளிலும் எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் வலுவாகவும், உரிய சமநிலையுடனும் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.