இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான புகார்கள், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளைப் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வகையில், தனக்கென பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய்யின் நல்லாசியுடன், தன் மீது நம்பிக்கை வைத்து வெற்றிபெறச் செய்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் நலனுக்காகவும், இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவும் இந்தப் பிரத்யேக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இணையதள முகவரி: https://tvkramesh.in இந்த இணையதளம் வாயிலாகப் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே புகார்கள், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை எளிதாகப் பதிவு செய்யலாம். மேலும், தாங்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளின் நிலவரத்தையும் அறிந்துகொள்ள முடியும். இதுதவிர, புகார்கள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அலைபேசி எண்கள் மூலமாகவும் ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள், உரிய ஆதாரங்களுடன் தங்களது மனுக்களை அமைச்சர் அலுவலகத்திற்குத் தெரிவிக்கலாம். அவற்றின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கும் மக்கள் பிரதிநிதிக்கும் இடையிலான தொடர்பை எளிதாக்கி, மக்களின் குறைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்கு இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். “மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்போம்; மக்களின் குறைகளைத் தீர்ப்போம்; மக்கள் சேவையில் தொடர்ந்து பயணிப்போம்” என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.