மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியானது, தங்கள் கட்சி மீதும் அதன் தலைவர்கள் மீதும் முன்வைக்கப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகளுக்கும் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கும் மக்கள் அளித்த பதிலடி என்று தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான மக்களின் ஆதரவையும், ஜனநாயகத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர்களுக்குப் பணம் வழங்காமலும், அவர்களை அடைத்து வைத்து அவமானப்படுத்தாமலும், எந்தத் தேர்தல் உத்தியையும் பின்பற்றாமல் அன்பு, பாசம், உறவு மற்றும் ஜனநாயகத்தை முன்னிறுத்தி இந்த வெற்றி பெறப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். தமிழகத்தை ஊழல் சக்திகளின் கோட்டையாகக் கருத முடியாது என்பதையும், அது மக்களின் பேராதரவைப் பெற்ற சக்திகளின் களமாக இருப்பதையும் இந்த முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், பணபலத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் அணுகுமுறைக்கு எதிராக இந்த வெற்றி அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தலில் முறைகேடான பேரங்கள் நடைபெற்றதாகக் கூறி அவதூறு பரப்பியவர்களுக்கு மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் பதிலளித்துள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய கருத்துகளை முன்வைத்தவர்களை மக்கள் புறக்கணித்திருப்பதாகவும், அவர்களுக்கு மீண்டும் தோல்வியைப் பரிசளித்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இரண்டு நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ததை விமர்சித்தவர்களுக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் பதிலாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யத் தங்களுக்கு அனுமதி கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்குமென மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார். எப்போதும் மக்களின் பக்கமே நிற்போம் என்றும், அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதே தங்களின் கடமை மட்டுமல்லாமல், மக்களுக்கு செலுத்த வேண்டிய நன்றிக்கடனுமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்காகத் தொடர்ந்து முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் எனவும் உறுதியளித்துள்ளார். இரு தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு குடும்பத்தில் ஒருவராக நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள விஜய், தேர்தல் வெற்றிக்காகப் பாடுபட்ட மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், களத்தில் தீவிரமாகப் பணியாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட மற்றும் இதர நிலை நிர்வாகிகளுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோருக்கும் விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி தனக்கோ அல்லது தமிழக வெற்றிக் கழகத்துக்கோ மட்டுமே சொந்தமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துகள், தனிப்பட்ட முறையிலான தரம் தாழ்ந்த தாக்குதல்கள் மற்றும் நேர்மையான தலைவர்கள், தொண்டர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பாக இதைக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, இந்த வெற்றி அரசியல் நாகரிகத்துக்கும் தனிமனித மாண்புக்கும் கிடைத்த வெற்றி என்றும், எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும் விஜய் கூறியுள்ளார். இதுபோன்ற வெற்றிகள் தொடர்ந்து கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், எதிர்கால வெற்றிகளுக்கும் முன்கூட்டியே நன்றி தெரிவித்துள்ளார். “நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று தனது அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.